தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் - கலெக்டர் தகவல்


தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் - கலெக்டர் தகவல்
x

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி 9.10.2023 (திங்கட்கிழமை) அன்றும் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி 11.10.2023 (புதன் கிழமை) அன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியாக பேச்சுப்போட்டிகள் காஞ்சீபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு முற்பகல் 9 மணிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கப்பட உள்ளன.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கல்லூரிக்கு 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வரே தேர்வு செய்தும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பள்ளிகளின் தலைமையாசிரியர்களே ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் 6-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், கல்லூரி மாணவ -மாணவியருக்கும் தனித்தனியே கீழ்கண்ட தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் அனைத்து தலைப்புகளையும் தயார் செய்து வர வேண்டும். போட்டி நடைபெறும் நாளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் தலைப்பை பற்றி பேச வேண்டும்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு காஞ்சீத்தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா போன்ற தலைப்புகளில் போட்டி நடத்தப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு அண்ணாவும் மேடைபேச்சும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைகாணலாம் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் நடைத்தப்பட உள்ளன. போட்டி நடைபெறும் நாள்- 9.10.2023.

தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள்:-

பள்ளி மாணவர்களுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்த்திருத்தங்கள் போன்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப்பேரொளி, தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள் போன்ற தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைத்தப்பட உள்ளன. போட்டி நடைபெறும் நாள்: 11.10.2023.

இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம். 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பட உள்ளன.

இதே போன்று பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.

மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பெறவும் உள்ளன. இதில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story