சிவன் கோவில்களில் நான்கு கால சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள்


சிவன் கோவில்களில் நான்கு கால சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள்
x

சிவன் கோவில்களில் நான்கு கால சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன.

திருச்சி

மகா சிவராத்திரி

ஆண்டுதோறும் மாசி மாதம் தேய்பிறை திரயோதசி மற்றும் சதுர்தசி சந்திக்கும் நாள் இரவு மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு சிவன் கோவில்களில் 4 கால சிறப்பு பூஜைகளும், சில கோவில்களில் 6 கால சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய கண்விழித்து சாமி தரிசனம் செய்தனர்.

அதன்படி, திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி 4 கால பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு கலச அபிஷேகம் மற்றும் பஞ்சோபசார தீபங்கள் காட்டி பூஜைகள் நடைபெற்றது. கோவில் கொடிமர மண்டபம் மற்றும் கண்ணுக்குட்டி மண்டபத்தில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் நான்கு சாமங்களிலும் சிவபூஜை நடத்தினர். இதில் விரும்புவோருக்கு சிவதீட்சை அளிக்கப்பட்டது.

ருத்ரயாகம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் காலை லட்சார்ச்சனை நடைபெற்றது. மகா சிவராத்திரியான நேற்று இரவு 4 கால பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக ஒவ்வொரு கால பூஜைக்கும் பல்வேறு அபிஷேகங்கள் முடிந்து சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவராத்திரியை விளக்கும் வகையில் வேடன் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கோவிலில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதேபோல் உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அத்துடன் முதற்கால பூஜை முடிந்ததும் ருத்ரயாகம் நடைபெற்றது. மேலும் கோவில் வளாகத்தில் சிவனடியார்கள் சிவபூஜை செய்தனர். கோவில் வளாகத்தில் மாணவிகளின் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், பாண்டமங்கலம் காசி விசுவநாதர் கோவில் ஆகியவற்றில் சிவராத்திரியையொட்டி 4 கால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கைலாசநாதர் கோவில்

மேலும் பெரியகடை வீதியில் உள்ள கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவிலில் நேற்று மாலை 6.30 மணி, இரவு 9 மணி, இரவு 11 மணி, நள்ளிரவு 1.30 மணி, அதிகாலை 3.30 மணி, அதிகாலை 4.30 மணிக்கு முறையே 6 கால பூஜைகள் நடைபெற்றன. திருச்சி சுப்பிரமணியபுரம்- புதுக்கோட்டை சாலையில் உள்ள நவசக்தி மாணிக்க விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதர் சன்னதி, கே.சாத்தனூர் வில்வனேஸ்வரர் சர்வஜன இரட்சாம்பிகை கோவிலில் 4 கால சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

லால்குடி, முசிறி, துறையூர்

இதேபோல் துறையூர் நல்லியம்பாளையம் சிவாலயத்தில் நேற்று 4 கால பூஜை நடைபெற்றது. மேலும் நல்லியம்பாளையத்தில் கைலாய மலை காட்சி படுத்தப்பட்டு இருந்தது. மேலும், லால்குடி சப்தரிஷீஸ்வரர், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர், சமயபுரம் போஜீஸ்வரர், மண்ணச்சநல்லூர் பூமிநாதசாமிகோவில், எதுமலை அண்ணாமலை ஈஸ்வரர் கோவில், முசிறி சந்திரமவுலீஸ்வரர், அண்ணாமலையார், வெள்ளூர் கிராமத்தில் திருக்காமேஸ்வரர், காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர தலமாக விளங்கும் கைலாசநாதர், திண்ணகோணம் பசுபதீஸ்வரர், திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர், தா.பேட்டை காசி விசுவநாதர், கல்லக்குடியில் உள்ள நித்ய கல்யாணி உடனுறை பசுபதீஸ்வரர், புள்ளம்பாடியில் உள்ள சிதம்பரேஸ்வரர், மால்வாய் மணிகண்டேஸ்வரர், வரகுப்பை ஆனந்தபத்மநாதசுவாமி, ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர், சரடமங்கலம் கைலாச நாதர், அலுந்தலைப்பூர் காசிவிசுவநாதர், பெருவளப்பூர் காளஹஸ்தீஸ்வரர், உப்பிலியபுரம் பசுபதீஸ்வரர், தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரத்தில் காசிவிஸ்வநாதர், ரெட்டியாப்பட்டி காளஹஸ்தீஸ்வரர், ஆலத்துடையான் பட்டி சோமநாதசுவாமி, எரகுடி சிதம்பரேஸ்வரர், கொப்பம்பட்டி சப்தரிஷீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முதல் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை வரை நான்கு காலபூஜைகள் நடந்தது. முன்னதாக நேற்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் சுவாமி, நந்திக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வைரிசெட்டிப்பாளையம் அன்னகாமாட்சியம்மன், தொட்டியம் அங்காளபரமேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் முன்புள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இரவு முழுவதும் கண் விழித்திருந்து வழிபாடு மேற்கொண்டனர். மேலும் சிவராத்திரியையொட்டி கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.


Next Story