வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெயில் கொடுமையில் இருந்து விலங்குகள், பறவைகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்


வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெயில் கொடுமையில் இருந்து விலங்குகள், பறவைகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்
x

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெயில் கொடுமையில் இருந்து விங்குகள், பறவைகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு

சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1,490 ஏக்கர் பரப்பில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. இங்கு நவீன வசதிகளுடன் இயற்கை சூழலில் விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. வாட்டி வதைக்கும் கோடை வெயிலை விலங்குகள், பறவைகள் சமாளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வண்டலூர் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பூங்காவில் நுழைந்ததுமே பார்வையாளர்கள் பார்வையில் முதலில் படுவது சிங்கப்பூர் மனித குரங்குகள் இருக்கும் பகுதிதான். இங்கு கோம்பி, கவுரி ஜோடி குரங்கும் அதற்கு பிறந்த ஆதித்யா என்ற 1½ வயது குட்டி குரங்கும் உள்ளது.

இந்த மனித குரங்குகளை பராமரிக்கும் பெண் ஊழியர் குரங்குகளின் பெயர்களை சொல்லி அழைக்கும் போது அவை இருப்பிட குகைகளில் இருந்து வெளியே ஓடி வருகிறது. அதனுடைய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல்களில் ஏறி கால் மேல் கால் போட்டு அமர்ந்து பல்வேறு சேட்டைகளை செய்கின்றன. இதனை பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

தற்போது நாளுக்கு நாள் வெயில் கொடுமை அதிகமாக உள்ளதால் மனித குரங்குகள் தங்களை வெயிலில் இருந்து காத்து கொள்வதற்காக பூங்கா நிர்வாகம் அதனுடைய இருப்பிடத்தில் குடை வடிவில் ஷவர் அமைத்துள்ளது அந்த ஷவரில் இருந்து வரும் குளிர்ந்த தண்ணீரில் மனித குரங்குகள் மற்றும் குட்டி குரங்கு ஆனந்தமாக குளித்து தங்களது உடல் சூட்டை தணித்துக்கொள்கிறது.

மனித குரங்குகளை பராமரிக்கும் பெண் ஊழியர் குளிர்ச்சியான தர்பூசணி பழங்களை குரங்குகளுக்கு வழங்கும் போது கவுரி கிளப் தட்டு என்று சொன்னவுடன் உடனே பெண் மனித குரங்கு கை தட்டி காண்பித்து விட்டு மீண்டும் தர்பூசணி கேட்டு வாங்கி சாப்பிடுகிறது. இதை அங்கு கூடியிருந்த சிறுவர்கள், பெரியோர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இதே போல கவுரியும் கோம்பியும் தர்பூசணி பழத்தை மகிழ்ச்சியோடு சாப்பிட்டு உடல் சூட்டை போக்கி் கொள்கிறது. மேலும் குரங்குகளுக்கு ஆப்பிள், வாழைப்பழம், வெள்ளரிக்காய், கேரட் போன்றவை உணவாக தரப்படுகிறது. காலை மற்றும் மதிய நேரங்களில் மனித குரங்குகள் மீது ஊழியர்கள் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். இதனால் அவை மகிழ்ச்சியில் குதிக்கின்றன. அதே போல பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ரோகிணி, பிரக்ருதி போன்ற 2 பெண் யானைகள் தங்களை வெயில் கொடுமையில் இருந்து காத்து கொள்வதற்காக யானைகள் இருப்பிட பகுதியில் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஷவரில் யானைகள் மாலை நேரத்தில் குளித்து மகிழ்ச்சியோடு விளையாடும் காட்சிகள் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் யானைகள் தங்கள் உடல் சூட்டை போக்கி கொள்வதற்காக அதனுடைய இருப்பிடத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 2 பெண் யானைகளும் குளித்து மகிழ்கின்றன. அதுமட்டுமின்றி பூங்கா ஊழியர்கள் அவ்வப்போது வாளி மூலம் தண்ணீரை வாரி யானையின் மீது ஊற்றுகின்றனர். மேலும் யானைகளுக்கு குளு, குளு, தர்பூசணி பழங்கள் மற்றும் இளநீரை ஊழியர்கள் தருகின்றனர். இதனை யானைகள் விரும்பி சாப்பிடுகின்றன.

பறவைகள் அடைக்கப்பட்டு இருக்கும் கூண்டுகளுக்கு மேல் கோணி பைகள் போடப்பட்டு அதன் மீது ஊழியர்கள் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் குழாய் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கின்றனர். இதனால் பறவைகள் கூண்டு எப்போதும் குளிர்ச்சியாக காணப்படுகிறது. இதனால் பறவைகளும் வெப்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்கிறது. வெள்ளை புலி இருப்பிடங்களில் புலிகள் வெயிலில் இருந்து தப்பித்து நிழலில் ஓய்வெடுப்பதற்காக சிறிய கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிறிய தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளன. வெயில் கொடுமையில் இருந்து தப்பித்து கொள்வதற்காக வெள்ளை புலிகள் அடிக்கடி தண்ணீர் தொட்டியில் உள்ள நீரில் குளித்து விளையாடுகிறது. சிங்கங்கள், சிறுத்தைகள், வங்கப்புலிகள் போன்ற விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள இரும்பு கூண்டில் ஊழியர்கள் 2 வேளையும் குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். மேலும் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கு ஐஸ் ஸ்கிப்பில் உறைய வைத்த இறைச்சி உணவுகள் வழங்கப்படுகிறது.

மேலும் பூங்காவில் உள்ள மான்கள் காட்டுமாடு, ஒட்டகச்சிவிங்கி போன்றவை கோடை வெயிலில் இருந்து தங்களை காத்து கொள்வதற்காக அதனுடைய இருப்பிடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நெருப்புக்கோழிகள் மீது மதியம் மற்றும் மாலை நேரங்களில் ஊழியர்கள் குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதால் நெருப்புக்கோழிகள் வெப்பத்தில் இருந்து தப்பிக்கிறது.

கோடைகாலத்தில் வெயிலை சமாளிக்கும் வகையில் சிறு கரடிகள் இருப்பிடத்தில் மரங்களில் இருந்து கீழே தொங்கும் வகையில் மண் பானைகளில் தேன் நிரப்பி துளைகள் இட்டு கீழே தேன் சொட்டும் வகையில் தொங்கவிடப்பட்டுள்ளன. அதில் இருந்து சொட்டும் தேன் துளிகளை சிறு கரடிகள் ருசித்து பருகுவதை பார்வையாளர்கள் பார்த்து மகிழ்கின்றனர். இதேபோல பல்வேறு விலங்குகள் இருப்பிட பகுதிகளில் வெயில் கொடுமையில் இருந்து விலங்குகள் தப்பிப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது இதே போல கோடைகாலங்களில் பூங்காவுக்கு வரும் பார்வையாளருக்காக அங்காங்கே குடிநீர் தொட்டிகள் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


Next Story