நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள்
நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
புரட்டாசி மாதம் முதலாவது சனிக்கிழமையையொட்டி நேற்று பெருமாள் கோவில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபட்டனர். இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வருவதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் இயக்க தொடக்க விழா காலை 7 மணிக்கு நடைபெற்றது. நெல்லை அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்பதிவு அடிப்படையில் 3 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. ஒரு பஸ்சுக்கு 55 பக்தர்கள் வீதம் மொத்தம் 165 பக்தர்கள் சிறப்பு பஸ்களில் பயணம் செய்தனர்.
பஸ்சில் சென்ற பக்தர்களுக்கு பிரசாத பை மற்றும் கோவில்கள் வரலாறு குறித்த விளக்க கையேடு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்ட மேலாளர்கள் சசிகுமார், பூல்ராஜ், கோபால கிருஷ்ணன், சுப்பிரமணியன், சுடலைமணி, மாரியப்பன், கிளை மேலாளர்கள் கோபால கிருஷ்ணன், விஜயகுமார், புதிய பஸ் நிலைய பொறுப்பாளர் முனியசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பஸ் நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் கோவில், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் கோவில், இரட்டை திருப்பதி அரவிந்த லோசனார் பெருமாள் கோவில், தேவர் பிரான் கோவில், பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஆகிய 9 கோவில்களுக்கும் சென்று இரவு மீண்டும் புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது. இதேபோல் வருகிற 30-ந்தேதி மற்றும் அக்டோபர் மாதம் 7, 14-ந்தேதிகளிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதுதவிர நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து திருவேங்கட நாதபுரம், கருங்குளம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், வள்ளியூரில் இருந்து களக்காடு வழியாக திருக்குறுங்குடிக்கும், வீரவநல்லூரில் இருந்து அத்தாளநல்லூருக்கும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.