வங்கி சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம்


வங்கி சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 10 Feb 2023 12:30 AM IST (Updated: 10 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் தபால் துறை சார்பில் விவசாயிகளுக்கு வங்கி சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு சிறப்பு முகாம் நடந்து வருகிறது என்று தபால் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேனி

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் ஆண்டுதோறும் ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவியை பெற வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் ஆகும். தேனி மாவட்டத்தில் இந்த உதவித்தொகை பெறும் சுமார் 4,500 விவசாயிகள் இதுவரை வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆதார் எண் இணைக்கப்பட்ட சேமிப்பு கணக்குகளை தொடங்க இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகின்றன. இந்த சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும். தபால்காரர் மற்றும் கிராம தபால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் விவசாயிகள் தங்களின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் வங்கி கணக்கு தொடங்க முடியும். எனவே, விவசாயிகள் அனைவரும் வருகிற 15-ந்தேதிக்குள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைத்தோ அல்லது புதிய வங்கி கணக்கு தொடங்கியோ பயன்பெறலாம். இத்தகவலை தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தெரிவித்தார்.

1 More update

Related Tags :
Next Story