மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்


மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 11 Sep 2023 11:15 PM GMT (Updated: 11 Sep 2023 11:15 PM GMT)

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே வருகிற 16-ந் தேதி முதல் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.

நீலகிரி

ஊட்டி

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே வருகிற 16-ந் தேதி முதல் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.

சுற்றுலா பயணிகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய அந்தஸ்து பெற்ற ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஊட்டியில் கோடை சீசனின்போது, மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால் டிக்கெட் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், ஆகஸ்டு மாதம் இறுதி வரை சிறப்பு ரெயில் நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில் அடுத்து வரும் பண்டிகை உள்பட பல்வேறு காரணங்களால் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே வருகிற 16-ந் தேதி முதல் மீண்டும் சிறப்பு மலை ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சிறப்பு மலை ரெயில்

இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேட்டுபாளையம்-ஊட்டி இடையே வருகிற 16, 30-ந் தேதி, அக்டோபர் 21, 23-ந் தேதியும், ஊட்டி-மேட்டுபாளையம் இடையே வருகிற 18-ந் தேதி, அக்டோபர் 2, 22, 24-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டியில் இருந்து ரெயில் காலை 9.10 மணிக்கு புறப்படும்.இதேபோல் குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் வருகிற 17, 18, அக்டோபர் 1, 2-ந் தேதியும், ஊட்டி-குன்னூர் இடையே வருகிற 16, 17, 30 மற்றும் அக்டோபர் 1-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது. குன்னூரில் இருந்து ஊட்டிக்கு காலை 8.20 மணிக்கும், ஊட்டியில் இருந்து குன்னூருக்கு மாலை 4.45 மணிக்கும் ரெயில் புறப்படுகிறது.

ஆன்லைனில் முன்பதிவு

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே முதல் வகுப்பில் 40 இருக்கைகளுடன் ரெயில் இயக்கப்படும். குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் கூடுதலாக 40 இருக்கைகள் சேர்த்து 80 இருக்கைகளுடனும், 2-ம் வகுப்பில் 140 இருக்கைகளுடனும் இயக்கப்படும். இதுதவிர ஊட்டி-கேத்தி இடையே 3 முறை சிறப்பு ரெயில் வருகிற 17 மற்றும் அக்டோபர் 1-ந் தேதி இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story