பிரபல ரவுடிகள் 4 பேரிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தீவிர விசாரணை


பிரபல ரவுடிகள் 4 பேரிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தீவிர விசாரணை
x

பிரபல ரவுடிகள் 4 பேரிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.

திருச்சி

ராமஜெயம் கொலை வழக்கு

திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். பிரபல தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தின் உடல் திருச்சி-கல்லணை ரோட்டில் பொன்னிடெல்டா பகுதியில் காவிரி ஆற்று கரையோரம் வீசப்பட்டு கிடந்தது. அவருடைய கை, கால்கள் கட்டுக்கம்பியால் கட்டப்பட்டு இருந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து அப்போதைய கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஆனாலும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 5 ஆண்டுகள் விசாரணை நடத்தியபிறகும் வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் கோர்ட்டு உத்தரவின்பேரில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

வாகனம் கண்டுபிடிப்பு

சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரித்தனர். ஆனால் வழக்கு கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்தது. கொலையாளிகள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில், துணை சூப்பிரண்டு மதன், சி.பி.ஐ. அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.

சிறப்பு புலனாய்வு குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். ராமஜெயம் கொலை வழக்கில் பயனுள்ள துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தனர். ஆனாலும் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறிப்பிட்ட மாடல் உள்ள காரில் தான் ராமஜெயம் கடத்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் அதே மாடல் கொண்ட காரை வைத்திருந்த உரிமையாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

ரவுடிகள் 4 பேரிடம் விசாரணை

இதனை தொடர்ந்து ராமஜெயம் கொலை வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த ரவுடிகளான மோகன்ராம், அவரது கூட்டாளி கணேசன் என்ற நரைமுடி கணேசன், புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில் மற்றும் மேலும் ஒருவர் உள்பட 4 பேரை சிறப்பு புலனாய்வுக்குழுவினர் பிடித்து விசாரித்து வருகிறார்கள். இவர்கள் 4 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. இதில் ரவுடியான திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம் மீது கொலை, ஆள்கடத்தல் உள்பட பல வழக்குகள் உள்ளன.

இவர்கள் சென்னையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான எம்.கே.பாலன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர். சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த எம்.கே.பாலன் தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தி.மு.க.வில் இணைந்தார். அதன்பிறகு தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த அவர் கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதி கொலை செய்யப்பட்டார்.

ஒரே மாதிரியாக நடந்த சம்பவம்

முன்னாள் எம்.எல்.ஏ. பாலனும் வீட்டில் இருந்து அதிகாலை நடைபயிற்சி சென்றபோது தான் கடத்தி கொலை செய்யப்பட்டார். அதேபோல்தான் திருச்சி ராமஜெயமும் அதிகாலை நடைபயற்சி சென்றபோது காரில் கடத்திச்சென்று கொலை செய்யப்பட்டார். அதனால் இந்த இரு வழக்கிலும் நிகழ்ந்த சம்பவம் ஒரே மாதிரியாக இருப்பதாக கருதி அந்த கோணத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில்தான் எம்.கே.பாலன் கொலை வழக்கில் தொடர்புடையவர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ராமஜெயம் கொலை சம்பவம் அரங்கேறி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தநிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடிகள் 4 பேர் தற்போது விசாரணை வளையத்தில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story