அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரியில் பிரசித்தி பெற்ற அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டியும், நன்றாக மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பூஜை நேற்று அதிகாலையில் நடந்தது. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆவணி முதல் நாளான நேற்று அதிகாலையில் அழகுமுத்து மாரியம்மனுக்கு பல்வேறு வகையான பழங்கள், முறுக்கு, அதிரசம், வளையல்கள், தாமரை மலர்கள் போன்றவற்றால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தானியங்களை கொண்டு தயார் செய்யப்பட்ட கஞ்சி உள்ளிட்டவற்றை படையல் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பூஜை முடிந்ததும் அம்மனுக்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முறுக்கு, அதிரசம், வடை, மாலை, பழங்கள், மற்றும் வளையல்கள் அனைத்தையும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையிலான பக்தர்கள் செய்திருந்தனர்.