கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை


கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை
x

கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை

திருப்பூர்

திருப்பூர்

தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பூர் மாநகரில் உள்ள கோவில்களில் சாமிக்கு ரூபாய் நோட்டு அலங்காரம், காய்கறி, கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டு

சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சோபகிருது புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் நேற்று முன்தினம் இரவே விஷூ கனி காண அவரவர் வீடுகளில் ஏற்பாடுகளை செய்தனர். பெரிய தட்டில் மா, பலா, வாழை மற்றும் மற்ற பழங்கள், எலுமிச்சை பழம், வெற்றிலை, பாக்கு, பூக்கள், மஞ்சள், குங்குமம், தங்க நகைகள், ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றுடன் முகம் பார்க்கும் கண்ணாடியை தட்டின் முன் வைத்து சாமி படத்துக்கு முன் வைத்தார்கள்.

நேற்று காலை எழுந்ததும் பழங்களுடன் சாமியை பார்த்து வணங்கினார்கள். தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பூரில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை முதல் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சிறப்பு வழிபாடு

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினார்கள். ஊத்துக்குளி ரோடு குருவாயூரப்பன் கோவில், திருப்பூர் திருப்பதி கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புஷ்பா ரவுண்டானாவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வாலிபாளையத்தில் உள்ள கல்யாண சுப்பிரமணியசாமிக்கு மலர்கள் மற்றும் கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மங்கலம் ரோட்டில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முத்துமாரியம்மன் கோவில்

காலேஜ் ரோடு அய்யப்பன் கோவிலில் விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் கோவில்வழி பிள்ளையார்நகர் முத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் காய்கனி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சக்தி விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி விநாயகருக்கு கும்பாபிஷேகம் மற்றும் தீர்த்த கலச ஊர்வலம், சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடைபெற்றது.

இதுபோல் திருப்பூர் மாநகரில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் தீர்த்தகலசம் ஏந்தி ஊர்வலமாக வந்து சாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதுபோல் பெரும்பாலான கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



Next Story