சூரிய கிரகணத்திற்கு பின் நெல்லையப்பர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜை; காணொலி வெளியீடு


சூரிய கிரகணத்திற்கு பின் நெல்லையப்பர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜை; காணொலி வெளியீடு
x

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகண நிகழ்விற்கு பின் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.



நெல்லை,


சூரியன், நிலா, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. அப்போது, நிலவின் நிழல் சூரியனை மறைக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அந்த வகையில், தீபாவளிக்கு மறுநாளான நேற்று (25-ந்தேதி) மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை பகுதி சூரிய கிரகணம் நிகழும் என தெரிவிக்கப்பட்டது.

குஜராத்தின் துவாரகா நகரில் அதிக அளவாக 1 மணிநேரம் 45 நிமிடங்களும், மிக குறைந்த அளவாக கொல்கத்தா நகரில் 11 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் மாலை 4.29 மணிக்கு தென்பட தொடங்கியது.

தமிழகத்தின் சென்னையில் 5.14 மணிக்கு ஏற்பட தொடங்கும் சூரிய கிரகணம் 30 நிமிடங்களை வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, சூரிய கிரகணம் நேற்று மாலை 5.14 மணியில் இருந்து மாலை 5.44 மணி வரை சுமார் அரை மணி நேரம் நடந்தது.

சூரிய கிரகண நிகழ்வையொட்டி, தமிழகத்தின் முக்கிய கோவில்களில் நடைசாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, நெல்லையில் உள்ள நெல்லையப்பர் திருக்கோவிலில் நேற்று நண்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இந்த ஆண்டுக்கான கடைசி சூரிய கிரகணம் நிறைவடைந்த நிலையில், நெல்லை நெல்லையப்பர் கோயிலில் சூரிய கிரகண சாந்தி தீர்த்தவாரி நடைபெற்றது. சூரிய கிரகணம் நிறைவடைந்த பிறகு, நெல்லையப்பர் திருக்கோவில் பொற்றாமரை குளத்தில், சுவாமி சந்திரசேகரர் பவானி அம்பாளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோன்று, பல்வேறு வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து மகா தீபாரதனையும் நடைபெற்றது. பின்பு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதேபோன்று, திருவாரூர் தியாகராஜர் கோவில், ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில்களிலும் தீர்த்தவாரி உற்சவம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சூரிய கிரகண நிறைவிற்கு பின்பு, திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலும் திறக்கப்பட்டது.



Next Story