புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x

புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை

பெருமாளுக்கு உகந்த மாதமாக புரட்டாசி கருதப்படுகிறது. மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமையும் பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று சேலம் மாநகரில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

சேலம் கோட்டை அழகிரிநாதர் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவிலில் காலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அதன்பின்னர் அழகிரிநாதர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கண்ணாடி மாளிகையில் ராமர், லட்சுமணன், சீதா, ஆஞ்சநேயர் ஊஞ்சல் உற்சவ சிறப்பு அலங்காரத்தில் இருந்தனர். மேலும் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில்

சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் ஆஞ்சநேருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், ஆனந்தா இறக்கம் அருகே உள்ள லட்சுமி நாராயணசாமி கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், சின்னத்திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.


Next Story