ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை


ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
x

அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

வேலூர்

அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி

வேலூர் மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோவிலில்களில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கொணவட்டத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதேபோன்று வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மூலவருக்கு செந்தூர் அலங்காரமும், வெளியே உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு வெற்றிலையால் மாலை அணிவிக்கப்பட்டு ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

ரங்காபுரம் கோதண்டராமர் கோவிலில் புஷ்ப அங்கி அலங்காரம், காகிதப்பட்டறையில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சேண்பாக்கத்தில் உள்ள பக்தஆஞ்சநேயர் கோவில், ஏரியூர் ஆஞ்சநேயர் கோவில், தோட்டபாளையத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு யோகா அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

சாஸ்திரிநகர்

வேலூர் வேலப்பாடி சாஸ்திரிநகரில் உள்ள வழித்துணை வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. இதேபோல புதுவசூர் சகஸ்ரலிங்க யோக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலையில் மூலவர் நேத்திர தரிசனம் தொடங்கியது. தொடர்ந்து கோ பூஜை, சொர்ண புஷ்பாஞ்சலி, சுவாமி வீதிஉலா நடந்தது. காலை 11 மணிக்கு குருஜி ரவீந்திரர் மகாயாக பூஜையை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குடியாத்தம்

குடியாத்தம் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சீதாராம ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிச்சனூர் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள சீதாராம ஆஞ்சநேயர் கோவிலில் 13 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கவுண்டன்யமகாநதி ஆற்றில் அமைந்துள்ள ஜலகண்ட பக்த ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

பிச்சனூர் பலமநேர் ரோட்டில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காங்கிரஸ் ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், தரணம்பேட்டை பஜாரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், பரதராமியை அடுத்த டி.பி.பாளையம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தை அடுத்த மகாதேவமலையில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி மகாதேவருக்கு அபிஷேகம், ஆஞ்சநேயருக்கு வடைமாலை, துளசி மாலை உள்ளிட்ட அலங்காரம், சிறப்பு ஆராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றதுன. விழாவையொட்டி மகானந்தசித்தர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

லத்தேரியை அடுத்த கோரப்பட்டரை கிராமத்தில் உள்ள 18 அடி உயர ராமபக்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், 1,008 வடைமாலை, துளசி மாலை உள்ளிட்ட அலங்காரம்,சிறப்பு ஆராதனை ஆகியவை நடைபெற்றது.

பள்ளிகொண்டா அடுத்து கழனிபாக்கம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வீர அனுமன் சித்தாஸ்ரமம் கோவிலில் நேற்று நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் செய்திருந்தார்.


Next Story