சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை


சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 7 Jan 2023 1:00 AM IST (Updated: 7 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆருத்ரா தரிசனத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்

ஆருத்ரா தரிசனத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு அபிஷேகம்

சேலம் மாநகரில் பிரசித்திபெற்ற சுகவனேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் தொடங்கியது. பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், நெய், பழங்கள் உள்பட பல்வேறு திரவியங்களால் நேற்று காலை 6 மணி வரை நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று சுகவனேசுவரருக்கு தங்க நாகாபரணம், சொர்ணாம்பிகைக்கு தங்க கவசம் ஆகியவை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதே போல் காசிவிஸ்வநாதர் கோவில், அம்மாபேட்டை பட்டீஸ்வரர் கோவில், செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணியசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பூஜைகள்

கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரிய புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் பர்வதவர்தனி உடனமர் சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி 6½ அடி உயர நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டன.

இதேபோல் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ெதாடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

16 வகை திரவியங்கள்

ஆத்தூர் கோட்டை காய நிர்மலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் நடராஜர் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போன்று தாரமங்கலம் காசி விஸ்வநாதர் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.


Next Story