விழுப்புரம் கோவில்களில் சிறப்பு பூஜை
குரு பெயர்ச்சியையொட்டி விழுப்புரம் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
விழுப்புரம்
குருபெயர்ச்சி விழா
ஒவ்வொரு ஆண்டும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவதை குருபெயர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டு அந்நாளில் கோவில்களில் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று முன்தினம் இரவு குரு பகவான் மீனம் ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்ந்ததையொட்டி கோவில்களில் நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானுக்கும், சிவன் கோவில்களில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழுப்புரம் கோவில்களில்
விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு குரு தட்சிணாமூர்த்திக்கு பால், தயிர், நெய், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. இவை முடிந்ததும் குரு தட்சிணாமூர்த்திக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
அதன் பிறகு இரவு 11.30 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைந்ததும் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆதிவாலீஸ்வரர், கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர், மகாராஜபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், கோலியனூர் வாலீஸ்வரர், விழுப்புரம் அமராபதி விநாயகர், கோட்டை விநாயகர், பூந்தோட்டம் முத்துமாரியம்மன், ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ராஜ விநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.