முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் நேற்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கடலூர்
பக்ரீத் பண்டிகை
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூரிலும் பக்ரீத் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி முஸ்லிம்கள் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தினர். கடலூர் டவுன்ஹாலிலும் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
தொழுகை முடிந்த பிறகு ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். குழந்தைகளும் பலர் தொழுகை செய்து, ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். இதேபோன்று கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம், கடலூர் முதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் அவர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஏழை எளிய மக்களுக்கு இறைச்சி (குர்பானி) வழங்கினர். அனைத்து தரப்பு மக்களும் தங்களது முஸ்லிம் நண்பர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
நெல்லிக்குப்பம்
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நெல்லிக்குப்பம் பகுதியிலும் கொண்டாடப்பட்டது. நெல்லிக்குப்பத்தில் நேற்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ஊர்வலமாக நகரின் முக்கிய சாலை வழியாக கொத்பா பள்ளிவாசலுக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதன் பிறகு ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். முன்னதாக இறைச்சி, மளிகைப்பொருட்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு குர்பானியாக வழங்கினர்.
பரங்கிப்பேட்டை
பரங்கிப்பேட்டை மீராபள்ளி தெருவில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நேற்று காலை 8 மணியளவில் தொடங்கிய சிறப்பு தொழுகை 8.30 மணிக்கு முடிவடைந்தது. இதில் புத்தாடை அணிந்து ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர்.
இதேபோல் புவனகிரியில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். அதேபோல் கிள்ளை, பி.முட்லூர், பெரியப்பட்டு, கொடிப்பள்ளம், கோவிலம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகையையொட்டி பரங்கிப்பேட்டையில் பெரும்பால கடைகள் மூடப்பட்டிருந்தன.
விருத்தாசலம்
பக்ரீத் பண்டிகையையொட்டி விருத்தாசலம் நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் முஸ்லிம் பெண்களும்திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல் காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, சிதம்பரம் என மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.