பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை


பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 22 April 2023 6:45 PM GMT (Updated: 22 April 2023 6:45 PM GMT)

ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

ரம்ஜான் பண்டிகை

கடவுள் ஒருவரே, 5 வேளை தொழுதல், ரம்ஜான் நோன்பு இருத்தல், ஏழைகளுக்கு தானம் செய்தல், புனித ஹஜ் பயணம் மேற்கோள்தல் என 5 கடமைகளை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று புனித நூலான குரானில் கூறப்பட்டு உள்ளது. இதை முஸ்லிம்கள் கடைபிடித்து வருகின்றனர்.

அதன்படி கடந்த மாதம் 23-ந் தேதி ரம்ஜான் நோன்பு தொடங்கியது. நோன்பு தொடங்கி 30 நாட்கள் நிறைவடைந்த நிலையில், பிறை தென்பட்டது. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி, வால்பாறையில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் நேற்று கொண்டாடினர்.

சிறப்பு தொழுகை

இதையொட்டி வால்பாறையில் உள்ள ஆனைமலை ஹில்ஸ் ஜமா அத் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையை முன்னிட்டு சிறப்பு மத சொற்பொழிவு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் வால்பாறை சுற்று வட்டார முஸ்லிம்கள், பல்வேறு தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்து வரக்கூடிய அசாம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று சோலையாறு நகர், உருளிக்கல், சோலையாறு எஸ்டேட், சிங்கோனா, முடீஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகைக்கு பிறகு பள்ளிவாசல்களில் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் பள்ளிவாசல்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பொள்ளாச்சி

இதேபோன்று பொள்ளாச்சி பெரிய பள்ளி வாசலில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அங்கு காலை 9 மணிக்கு இமாம் முகமது மன்சூர் ரஹ்மானி ஹஜ்ரத் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

சூளேஸ்வரன்பட்டி, கோட்டூர் ரோடு குமரன் நகர், மார்க்கெட் ரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலும் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


Next Story