மழை வேண்டி சிறப்பு பூஜை
பாபநாசத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசத்தில் மழை வேண்டி, இந்து முன்னணி சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. மாநில செயலாளர் அரசு ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். 11 கும்பங்கள் வைத்து மழை வேண்டி பூஜை நடந்தது. பூஜையை தொடர்ந்து கலச நீர் இந்து முன்னணியினரால் எடுத்து செல்லப்பட்டு தாமிரபரணி நதியில் விடப்பட்டது.
பின்னர் இந்து முன்னணி மாநில செயலாளர் அரசுராஜா கூறுகையில், ''தாமிரபரணி நதி மாசுபட்டு கொண்டிருக்கிறது. பாபநாசம் கோவிலில் முறையான பூஜைகள் நடக்கவில்லை. தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். பாபநாசம் கோவில் பின்புறம் கேட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பாபநாசம் கோவிலில் ஆகம விதிப்படி பூஜை நடத்த வேண்டும்'' என்று கூறினார். விக்கிரமசிங்கபுரம் நகர தலைவர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.