ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல்

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு வழிபாடு

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தின் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும், அம்மனுக்கு கூழ் படைத்து அதை பக்தர்களுக்கு வழங்குவதும் வழக்கம். அதன்படி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி இன்று காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட 16 வகையான திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பகல் 12 மணியளவில் உச்சி கால பூஜை நடந்தது. அதன் பின்னர் மாலையில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, இரவு 7 மணியளவில் தங்க ரத உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். மேலும் அம்மனுக்கு கூழ் படைத்து அதனை பக்தர்களுக்கு வழங்கினர்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது ஞானாம்பிகை-காளகத்தீஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் புவனேஸ்வரி அம்மன், மலையடிவாரம் பத்ரகாளியம்மன், கவாடக்கார தெரு காளியம்மன், மேட்டுராஜக்காப்பட்டி காளியம்மன், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேடசந்தூர்

வேடசந்தூர் அய்யனார் கோவிலில் உள்ள துர்க்கையம்மன் மற்றும் வரலட்சுமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு பெண் பக்தர்களுக்கு வளையல், தாலிக்கொடி வழங்கப்பட்டது முடிவில் ஒட்டநாகம்பட்டி நந்தீஸ்வரன் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

குஜிலியம்பாறையில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பெண்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதன்பிறகு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பட்டிவீரன்பட்டி

பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவிலில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி உலக நன்மை வேண்டி யாகவேள்வி மற்றும் பூஜை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பால், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாம்பழம், திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பட்டிவீரன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இதேபோல் பத்திரகாளியம்மன் கோவில், காளியம்மன், பகவதியம்மன் கோவில், அய்யம்பாளையம் சின்ன முத்தாலம்மன், பெரிய முத்தாலம்மன் கோவில், சித்தரேவு முத்தாலம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

வரலட்சுமி விரதம்

பழனி பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், ரண காளியம்மன் கோவில், கிரிவீதி காளிகாம்பாள், அழகுநாச்சி அம்மன் கோவில், வனதுர்கை அம்மன் கோவில் என பழனி பகுதியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் நேற்று காலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். கோவில்களில் அம்மனுக்கு பால், பழம், தயிர், பன்னீர் என 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

மேலும் நேற்று வரலட்சுமி விரதம் என்பதால், தங்கள் கணவர்கள் நலமுடன் வாழ வேண்டி வீடுகளில் பெண்கள் கூடி சிறப்பு வழிபாடு நடத்தினர். பழனி மயிலாடும்நகரில் பெண்கள் ஒன்று கூடி வீட்டில் லட்சுமி அலங்காரம் செய்து இட்லி, பழங்கள் ஆகியவற்றை படைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து சுமங்கலி பூஜை, அம்மன் பதிகம் போற்றி பாடல் பாடினர்.


Next Story