அய்யப்பன் கோவில்களில் மண்டல பூஜை
பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள அய்யப்பன் கோவில்களில் மண்டல பூஜை நடைபெற்றது.
பட்டிவீரன்பட்டியில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமி அய்யப்பனுக்கு சந்தனம், விபூதி, மஞ்சள், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், பால் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மேலும் 18 படிகளுக்கு சிறப்பு பூஜைகளை குருசாமிகள் செய்தனர்.
அதன்பிறகு உலக நன்மைக்காகவும், நோய்நொடியின்றி மக்கள் வாழ வேண்டியும் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலில் மாலை 1,008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பட்டிவீரன்பட்டி அய்யப்ப சேவா சங்க நிர்வாகிகள், அய்யப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
சித்தரேவு வரதராஜபெருமாள் சன்னதி வளாகத்தில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் 61-ம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. இதில், அய்யப்ப பக்தர்கள் மட்டும் கலந்துகொண்ட சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது/ பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதிஉலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தேவரப்பன்பட்டி அய்யப்ப சேவா சங்கம் சார்பில் அங்குள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது.