கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஆடிப்பெருக்கு
ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18-ந் தேதி அன்று ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பதினெட்டாம்பெருக்கு என்றும், ஆடி 18 என்றும் அழைக்கப்படும் இந்த விழா ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிப்பதாகும். குறிப்பாக நதியை பெண்ணாக வணங்கும் நாளாகும். இந்த நாளில் புத்தாடை அணிந்து நதிக்கரைகளிலும், நீர்நிலைகளின் கரைகளிலும் பொங்கல் உள்ளிட்டவைகளை படைத்து பூஜித்து வணங்குவது வழக்கம். இந்த நன்னாளில் தொடங்கும் காரியங்கள் பலமடங்கு பலன்தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், இந்நாளில் பெண்கள் தங்களின் கணவரின் நலனுக்காக வழிபாடு செய்து வணங்குவார்கள்.
திருமணமாகாத கன்னிப்பெண்கள் இந்நாளில் காதோலை கருகமணி, காப்பரிசி வைத்து பூஜை செய்தால் நல்ல கணவனை அடைவாள் என்பது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை. மேலும், ஆடிப்பெருக்கன்று பெண்களுக்கு தாலி பெருக்கி போடுவார்கள். புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நேற்று அம்மன் கோவில்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.
பக்தர்கள் தரிசனம்
ராமநாதபுரம் மகர்நோன்பு திடல் அருகில் 8 அடி உயரத்தில் எழுந்தருளி உள்ள ருத்ரமாதேவி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. ஊருணி கரையில் இருந்து கரகம், பால்குடம், தீச்சட்டி ஏந்தி பூசாரி முனியசாமி ேகாவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். விழாவையொட்டி ருத்ரமாதேவி, உத்ரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதேபோல, ராமநாதபுரம் வெட்டுடையாள் காளி, ராஜமாரியம்மன், வடக்குத்தெரு திரவுபதி அம்மன், கன்னிகா பரமேஸ்வரி அம்மன், வனசங்கரி அம்மன், முத்தால பரமேஸ்வரி அம்மன், மல்லம்மாள் காளி அம்மன், ராஜகாளியம்மன், ராஜேஸ்வரி அம்மன் கோவில்களில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றன. இந்த ஆடிப்பெருக்கு விழாவில் அதிகளவில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.