கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. பக்தர்களின் வருகை அதிகரிப்பால் நடை சாத்தாமல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஆங்கில புத்தாண்டு
ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு பிறந்தது. புத்தாண்டின் முதல் நாளான நேற்று பெரும்பாலானோர் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவில்களின் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
புத்தாண்டில் அதிகாலையில் எழுந்து குளித்து சிலர் இந்தாண்டின் முதல் கதிரவனை வணங்கி வரவேற்றனர்.
வேலூர் திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அங்கு புத்தாண்டை வரவேற்கும் வகையில் பெரிய அளவில் பூக்கோலம் போடப்பட்டிருந்தது. மேலும் அதன் அருகே பெருமாள், லட்சுமி ஆகியோரின் உருவம் நவதானியங்கள், மாதிரி ரூபாய் நோட்டுகள், தங்ககாசுகளால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனை பக்தர்கள் கண்டு ரசித்து சென்றனர்.
சிறப்பு பூஜை, வழிபாடு
இதேபோன்று வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சைதாப்பேட்டையில் உள்ள பழனியாண்டவர் கோவில், சத்துவாச்சாரி செல்வவிநாயகர் கோவில், வேலப்பாடி வரதராஜ பெருமாள் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்கள் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து புத்தாண்டு மகிழ்ச்சியான ஆண்டாக அமையும்படி வேண்டினர்.
வழக்கமாக கோவில் நடை மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாத்தப்படும். பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் நடை சாத்தப்படவில்லை. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வள்ளிமலை
காட்பாடியை அடுத்த வள்ளிமலை சுப்ரிரமணியசாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மலைக்கோவிலில் உள்ள மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு வெள்ளி கவசங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கீழ்கோவிலில் உள்ள மூலவரான ஆறுமுகசாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
புத்தாண்டையொட்டி காலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் வள்ளிமலை முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து மூலவர் மற்றும் உற்சவரை அரோகரா கோஷமிட்டு தரிசனம் செய்தனர். இதில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
காட்பாடி
காட்பாடி கிளித்தான்பட்டறையில் உள்ள மந்திராலய மடத்தின் கிளையான ராகவேந்திர சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு இங்குள்ள பிருந்தாவனத்திற்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தலைவர் மோதிலால் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
இதே போல பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சாமி கோவில், கழிஞ்சூர் முத்துமாரியம்மன் கோவில், சேனூர் ஈஸ்வரன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
குடியாத்தம்
குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு வெள்ளி கவசம் ணிவிக்கப்பட்டு, சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து நவதானியங்களில் கோலமும், உற்சவர் அம்மன் ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகளால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்.
லத்தேரியை அடுத்த தொண்டான் துளசி கிராமத்தில் உள்ள துளசிமலை முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு அபிஷேகம், வெள்ளிக் காப்பு அலங்காரம், ஆராதனை, அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.