ராமேசுவரம் கோவிலில் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள்


ராமேசுவரம் கோவிலில் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள்
x

மாசி மகா சிவராத்திரி முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று இரவு முழுவதும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடக்கிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மாசி மகா சிவராத்திரி முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று இரவு முழுவதும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடக்கிறது.

சிவராத்திரி திருவிழா

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் 7-வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்திலும் மாலை 5 மணிக்கு மேல் முத்தங்கி சேவை அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் 8-வது நாளான இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடராஜர் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வெள்ளி தேரோட்டம் நடைபெறுகிறது.

சிறப்பு அபிஷேகம்

மாசி மகா சிவராத்திரியான இன்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் நடையானது தொடர்ந்து இன்று பகல், இரவில் திறந்திருக்கும். நாளை(19-ந்தேதி) மதியம் 1 மணிக்குத்தான் கோவில் நடையானது சாத்தப்படுகிறது.

இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை அதிகாலை வரையிலும் மாசி மகா சிவராத்திரியையொட்டி, சுவாமிக்கு 6 கால சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு முழுவதும் சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன.

தேரோட்டம்

திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக 9-வது நாளான நாளை காலை 9 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் 20-ந் தேதி (திங்கட்கிழமை) மாசி மாத அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


Related Tags :
Next Story