'தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' - டி.ஜி.பி. சங்கர் ஜிவால்


தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன - டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
x

ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர். மக்கள் சிரமமின்றி பயணிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை தாம்பரம், பள்ளிக்கரணை பகுதிகளில் 1,100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜி.எஸ்.டி. சாலை, பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடி, இ.சி.ஆர். சாலைகளில் போக்குவரத்து சரிசெய்ய 300 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார் ஈடுபட உள்ளனர். ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர சென்னை சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் ஆவடி மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் மொத்தம் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்."

இவ்வாறு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.




Next Story