மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி இடையே வாரம் 2 முறை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
கோவை,
கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் திருச்செந்தூருக்கும் ரெயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக தூத்துக்குடிக்கு வாரம் 2 முறை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 19-ந்தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
கோவை-மேட்டுப்பாளையம் இடையே மெமோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இனிநாள் தோறும் 3 முறை போத்தனூர்-மேட்டுப்பாளையம் இடையே மெமோ ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த 2 ரெயில்களின் போக்குவரத்தை 19-ந்தேதி காலை 9 மணிக்கு மத்திய மந்திரி எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார். தூத்துக்குடிக்கு வாரம் 2 முறை இயக்கப்படும் சிறப்பு ரெயிலை வருங்காலங்களில் தினசரி ரெயிலாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






