செங்கல்பட்டில் குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெருவில் உள்ள நகர்புற சுகாதார நல மையத்தில் குழந்தைகளுக்கான தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
இந்த முகாமை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், தொடங்கி வைத்து தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.பின்னர் அவர் பேசுகையில்:- செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 32,000 குழந்தைகள் பிறக்கின்றனர். அதேபோல் சுமார் 37,000 கர்ப்பிணிகள் கர்ப்பத்தை பதிவு செய்கின்றனர். இந்த குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் தேசிய தடுப்பூசி அட்டவனையின்படி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
தடுப்பூசிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புதன்கிழமை தோறும் செலுத்தப்பட்டு வருகின்றது, துணை சுகாதார நிலையங்களுக்குட்பட்ட இடங்களில் வாரம் ஒரு பகுதியென 4 இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன என கூறினார். முகாமில் சுகாதார துறை துணை இயக்குனர் பரணிதரன், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் கர்பிணிகள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.