அனைத்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகளில் குரங்கு அம்மைக்கு சிறப்பு வார்டு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்


அனைத்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகளில் குரங்கு அம்மைக்கு சிறப்பு வார்டு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் ஆய்வு

உலக அளவில் சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் பரவி வருகிறது. இந்தநிலையில் அரபு நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய கேரளாவை சேர்ந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கடந்த 14-ந் தேதி உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் உஷார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்தநிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை நோய் பரிசோதனை மேற்கொள்வதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குரங்கு அம்மை நோய்

குரங்கு அம்மை நோய், விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகையான வைரஸ் மூலமாக ஏற்படுகிறது. விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு, பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை முழுமையாக சமைக்காமல் உண்ணுதல், பாதிக்கப்பட்ட விலங்கு கடித்தல், பாதிக்கப்பட்ட விலங்குகளை கையாளுதல் போன்ற காரணங்களால் பரவுகிறது.

ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு சுவாச காற்றில் நீர் திவலைகள் மூலமாகவோ, பாதிக்கப்பட்டவரின் உடல்திரவம் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபர்கள் அணியும் உடையை அணிவதன் மூலமாகவோ பரவும். ஆணுடன் உடலுறவு கொள்ளும் ஆண் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் இந்நோயினால் எளிதில் பாதிக்கக்கூடியவர்கள் என்றும், இவர்கள் மூலம் அவர்களுடன் தொடர்பு கொள்பவர்களுக்கும் இந்நோய் எளிதில் பரவும்.

சிறப்பு வார்டுகள்

குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தடிப்பு, கொப்பளம் போன்ற அறிகுறிகள் தென்படும். கடந்த மே மாதம் முதல் இதுவரை 63 நாடுகளில் இருந்து 9 ஆயிரத்து 647 பேர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மே 22-ந் தேதி முதற்கொண்டு தமிழக பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வந்த வெளிநாட்டு பயணிகள் 4 லட்சத்து 84 ஆயிரத்து 612 பேருக்கும் கொரோனா மற்றும் குரங்கு அம்மை நோய்க்கான காய்ச்சல் மற்றும் கொப்பளங்கள் உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மட்டும் 3 லட்சத்து 67 ஆயிரத்து 388 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள் மற்றும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளுக்கான சரும வியாதி, குழந்தைகளுக்கான புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு மற்றும் தடுப்பூசி பிரிவு அமைத்தும், குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு வார்டுகளை ஏற்படுத்தியும், அவ்வார்டுகளில் சிறப்பு டாக்டர்களை பணியில் ஈடுபடுத்தி கவனமுடன் செயல்பட வேண்டும் என அனைத்து சுகாதார பணிகள் இணை இயக்குநர்களுக்கும், மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்துதல்

குரங்கு அம்மை நோய் தொற்றின் அறிகுறிகளுடன் உள்ளவர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி, நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அவர்களின் மாதிரிகளை சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் மூலம் பூனே, தேசிய வைராலஜி நிலையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குனர் - சிறப்பு அலுவலர் டாக்டர் வடிவேலன், இணை இயக்குனர் டாக்டர் நிர்மல்சன், செங்கல்பட்டு துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் பரணிதரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story