டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைப்பு
வேலூர் பென்ட்லேன்ட் மருத்துவமனை உள்பட 4 அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெங்கு காய்ச்சல்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதையொட்டி டெங்கு கொசு ஒழிப்பு பணிகளும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் சுகாதாரத்துறை சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சலுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டது. அங்கு சிகிச்சை அளிக்க ஆண்களுக்கு 20 படுக்கைகள், பெண்களுக்கு 20 படுக்கைகள், குழந்தைகளுக்கு 20 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
தனிவார்டு அமைப்பு
இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின்பேரில் வேலூர் பென்ட்லேன்ட் மருத்துவமனை, அணைக்கட்டு, பேரணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இங்கு தலா 5 படுக்கைகள் உள்ளன. இந்த வார்டில் உள்ள ஒவ்வொரு படுக்கைக்கும் கொசுவலை அமைக்கப்பட்டு உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி 37 இடங்களில் நடந்த காய்ச்சல் முகாம்களில் 40 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு யாருக்கும் இல்லை. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் செய்த காய்ச்சல் பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் கண்டறியப்படவில்லை. 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ள நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.