அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள் தயார்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாக டீன் மணி தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல்
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
அதேசமயம், மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சேலம் மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு வார்டுகள்
இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் மணி கூறுகையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 2 பேர் மட்டும் டெங்கு அறிகுறியுடன் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறப்பு வார்டில் 230 படுக்கைகள், அவசர சிகிச்சை பிரிவில் 30 படுக்கைகள் என மொத்தம் 260 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. நோயாளிகளுக்கு தேவையான ரத்தம் கூடுதலாக உள்ளது. தேவையான அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பு இருக்கிறது. டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்களும் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க வேண்டும் என்றார்.