பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
வத்திராயிருப்பு
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
முதல் சனிக்கிழமை
வத்திராயிருப்பு அருகே மேல் அர்ச்சனாபுரத்தில் அமைந்துள்ளது அழகிய சாந்த மணவாளப் பெருமாள் கோவில். இந்த கோவிலில் புரட்டாசி முதலாவது சனிக்கிழமை உற்சவ விழாவில் மூலவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலையில் சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்களுடன் திருமஞ்சன வழிபாடு பக்தர்களின் திவ்ய நாம பஜனை, பாராயண வழிபாடு நடந்தது.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல் வத்திராயிருப்பு சேது நாராயணப் பெருமாள் சுவாமிக்கு அதிகாலை 3 மணிக்கு திருமஞ்சனம் வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிறப்பு அபிஷேகம்
அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்பரர், அமுதவல்லி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று விருதுநகர் ராமர் கோவில் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் பத்மாவதி தாயார், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சாத்தூர் அருகே இருக்கன்குடி பெருமாள் கோவிலில் பெருமாள், பூதேவி-ஸ்ரீதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.