மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உறியடி, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகளும் நடந்தன.
கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ணர் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுவது வழக்கம். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா புதுக்கோட்டையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தங்களது வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு மகிழ்ந்தனர்.
மேலும் குழந்தை பருவத்தில் கண்ணன் வீட்டிற்கு வருவது போன்று வாசலின் நுழைவுவாயிலில் இருந்து பூஜை அறை வரை சிறு குழந்தைகளின் கால் தடங்களை பதித்து கண்ணன் விரும்பும் சீடை முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை படைத்து வழிபாடு நடத்தினார்கள். இதனால் கிருஷ்ணர் தங்கள் இல்லத்துக்குள் வந்து ஆசி வழங்குவார் என்பது நம்பிக்கை.
தங்க கவச அலங்காரம்
புதுக்கோட்டை விட்டோபா பெருமாள் கோவிலில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து கிருஷ்ணர் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். மேலும் தெற்கு 4-ம் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறுவர்-சிறுமிகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு வந்து வழிபட்டனர்.
உறியடி உற்சவம்
அரிமளம் அருகே கடையக்குடி அருகே உள்ள பிரசன்ன ரெகுநாதர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவினை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைெயாட்டி பெண்களுக்கான கோலப்போட்டி, ஆண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மாலையில் உறியடி உற்சவமும், வழுக்கும் மரம் ஏறும் போட்டியும் நடைபெற்றது.
விராலிமலை
விராலிமலை புதிய பஸ் நிலையம் அருகே சத்குரு சம்ஹார மூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் கேசவபெருமாள் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.