திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத மகோற்சவ விழா தொடங்கியதை அடுத்து திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

புரட்டாசி மகோற்சவம்

வரலாற்றில் பிரசித்தி பெற்றதும், நடுநாட்டு திருப்பதி என அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் மகோற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மகோற்சவ விழா நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 7 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு உற்சவர் புறப்பாடு மற்றும் கண்ணாடி அறைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 8 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும், 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

ஊஞ்சல் சேவை

பின்னர் மாலை 4.30 மணிக்கு நித்யாநுசந்தானம், 6 மணிக்கு ஊஞ்சல் சேவை மற்றும் சகஸ்ர தீபம் ஏற்றுதல், 7.30 மணிக்கு விசேஷ திருவாராதனம், நாலாயிர திவ்ய பிரபந்தம், வேத பாராயணம், சேவை சாற்று முறை ஆகிய நிகழ்ச்சிகளும், இரவு 8 மணிக்கு பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இதில் திருக்கோவிலூரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜை

இந்த விழா அடுத்த மாதம் 17-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இது தவிர தினமும் ஆன்மிக சொற்பொழி, உபன்யாசங்கள், இசைக்கச்சேரி ஆகியவையும் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி தேகளீச ராமானுஜாச்சாரியார் மேற்பார்வையில் கோவில் தேவஸ்தான ஏஜெண்டு கிருஷ்ணன் சாமிகள் தலைமையில் விழாக் குழுவினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

சங்கராபுரம் பகுதி

புரட்டாசி மாத பிறப்பையொட்டி சங்கராபுரம் மணி நதிக்கரை அருகே உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேசபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக வெங்கடேச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் குளத்தூர் மற்றும் தியாகராஜபுரம் லட்சுமிநாராயண பெருமாள், தேவபாண்டலம் சவுந்தரவல்லி தாயார் பார்த்தசாரதி பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story