திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

புதுக்கோட்டை


ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் உள்ள சிறப்பை போல ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். அதாவது ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து அசைவ உணவை தவிர்த்து அம்மனை தரிசிப்பது வழக்கம்.

இதையொட்டி கோவில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்படும். பக்தர்கள் கோவிலுக்கு வழிபாடு நடத்த வரும்போது காய்கறிகளை வாங்கி சென்று வீட்டில் சமைப்பது உண்டு. அந்த வகையில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி இன்று திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நீண்ட வரிசையில்...

கோவில் வளாகத்தில் இருந்து கோவிலுக்குள் வரை பக்தர்கள் வரிசையாக செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. கட்டண தரிசனம் மற்றும் இலவச தரிசனம் என வகைப்படுத்தப்பட்டு வரிசை பிரித்து அனுப்பப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் பலர் விளக்கேற்றியும் வழிபாடு நடத்தினர். சிலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கூட்டம் அதிகம் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. புறக்காவல் நிலையமும் அமைக்கப்பட்டிருந்தன. கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக மேற்கூரையும் போடப்பட்டிருந்தது. இதனால் சூலத்தின் முன்பு பக்தர்கள் சிரமமின்றி விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். காய்கறி சந்தையில் காய்கறிகளை வாங்கி சென்று சமைத்து சாப்பிட்டனர். தொடர்ந்து இந்த ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story