ஆடிவெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடிவெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடிவெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆடிவெள்ளி
ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கு பண்டிகை கோலாகலமாக நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை வந்ததால் கடந்த 2 நாட்களாகவே அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டத்தை அதிக அளவில் காணமுடிந்தது.
பண்ணாரி
சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டத்தை காணமுடிந்தது. நேரம் செல்ல செல்ல மதியமும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், இருசக்கர வாகனங்களில் கோவிலுக்கு வந்திருந்தார்கள். முதலில் குண்டம் அமைக்கப்படும் இடத்தில் உப்பு, மிளகு தூவி அங்குள்ள திருமண்ணை எடுத்து பூசிக்கொண்டார்கள். பின்னர் கோவிலுக்குள் சென்று வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோபி
கோபி வடக்கு வீதியில் உள்ள பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியையொட்டி அம்மனுக்கு பால், தயிர், எலுமிச்சை பழம், பன்னீர், அபிஷேகம், திருநீறு, சந்தனம், குங்குமம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
எலுமிச்சை பழம் மாலை அணிந்து சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
பாரியூர் கொண்டத்து காளி
கோபி மொடச்சூர் பால மாரியம்மன் கோவிலில் வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவில், கொளப்பலூர் பச்சைநாயகி அம்மன் கோவில், கோபி சாரதா மாரியம்மன் கோவில், சீதாலட்சுமிபுரம் தண்டு மாரியம்மன் கோவில், புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைெபற்றன. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு கம்பங்கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பத்ரகாளியம்மன்
இதேபோல் கோபி கூகலூரில் உள்ள மீனாட்சி அம்பிகா சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவில், ஊஞ்சலூர் மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில், பவானி செல்லாண்டியம்மன் கோவில், கொடுமுடி புதுமாரியம்மன் மற்றும் மலையம்மன் கோவில், வெங்கம்பூர் அங்காளம்மன் கோவில்களிலும் நேற்று ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றன.
வளையல்-மஞ்சள் கயிறு
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியையொட்டி அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், பன்னீரால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் தங்க நகை அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பெண்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கோபி அருகே கூகலூரில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
கூகலூரில் உள்ள மத்தியபுரீஸ்வரர் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையைெயாட்டி மரகதவல்லி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி மரகதவல்லி மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
கொடுமுடி
கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் உள்ள மகாலட்சுமி தாயார் சன்னதி, மலையம்மன் கோவில், கொடுமுடி வடக்கு தெரு புது மாரியம்மன் கோவில், ஏமகண்டனூர் ஆட்சி அம்மன் கோவில், சென்னசமுத்திரம் மாரியம்மன் கோவில், சாலைப்புதூர் காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் முத்தங்கி அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.