ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தர்மபுரி

தர்மபுரி:

வைகாசி மாத அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி மாத அமாவாசை

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் வைகாசி மாத அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி எஸ்.வி, ரோடு ஸ்ரீஅபய ஆஞ்சநேய சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி அரிகர நாத சுவாமி கோவில் தெருவில் உள்ள தாசஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வே.முத்தம்பட்டி

பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேய சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் தர்மபுரி மாவட்டம் அல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று ரெயில் மூலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சிறப்ப வழிபாட்டில் சாமிக்கு பல்வேறு சிறப்பு ஆராதனை, பூஜை நடந்தது. சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குப்புசெட்டிபட்டி வீரஆஞ்சநேயர் கோவில், சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் சாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோன்று பெருமாள் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஏரியூர்

ஏரியூர் அருகே நாகமரை ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள முத்தையன் சுவாமி கோவிலில் அமாவாசையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தர்மபுரி மாவட்டம் மட்டும் அல்லாது சேலேம் மாவட்டத்தில் மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், கோட்டையூர், பண்ணவாடி பகுதியை சேர்ந்தவர்கள் பரிசலில் காவிரி நீர்த்தேக்கத்தை கடந்து இந்த ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்தனர்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும், சாமி ஊர்வலத்தின் போது அங்கபிரதட்சணம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். குழந்தை வரம் வேண்டி குழந்தை பெற்றவர்கள் தங்களது குழந்தைகளின் எடைக்கு எடை காசு காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story