விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

விநாயகர் சதுர்த்தி

புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாட்டையொட்டி அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சங்கீத மங்கள விநாயகர் கோவில், பல்லவன் குளக்கரை அருகே உள்ள சீதாபதி விநாயகர் கோவில், புதுக்குளம் கரையில் உள்ள விநாயகர் கோவில், ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள விநாயகர் கோவில், திலகர் திடல் அருகே உள்ள விநாயகர் கோவில், பெரியார் நகரில் சம்பந்த விநாயகர் கோவில் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திரளான பக்தர்கள் தரிசனம்

இதேபோல விநாயகர் சதுர்த்தியையொட்டி பிற கோவில்களில் உள்ள விநாயகர் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்து முன்னணியினர், இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.

இந்த சிலைகள் அமைக்கப்பட்ட இடங்களில் நடைபெற்ற பூஜையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல வீடுகளிலும் பொதுமக்கள் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். அவருக்கு பிடித்த உணவான கொழுக்கட்டை, பழ வகைகள், சுண்டல் உள்பட பொருட்களை படையலிட்டு வழிபட்டனர்.

கறம்பக்குடி, கீரனூர்

கறம்பக்குடி பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கறம்பக்குடி, ரெகுநாதபுரம், மழையூர் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் 74 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது.

கறம்பக்குடி பங்களாகுளத்தில் சித்தி விநாயகர், அக்ரஹாரம் கற்பக விநாயகர், செட்டித் தெருவில் மங்கள விநாயகர், தென்னகர் சாலையில் விநாயகர் கோவில்களில் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

கீரனூர் பகுதியில் 14 இடங்களில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தாலுகா அலுவலக சாலையில் உள்ள கோட்டைமேடு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் அன்னவாசல், கோல்டன்நகர், இந்திராகாலனி, புதூர், காட்டுப்பட்டி, இலுப்பூர், தென்னலூர் உள்ளிட்ட பல்ேவறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இலுப்பூர் அருகே உள்ள தென்னலூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஜல்லிக்கட்டு காளை மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்று சிலை வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காரையூர், மணமேல்குடி

காரையூர் அருகே சடையம்பட்டியில் ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்த 16-ந் தேதி 5 அடி விநாயகர் சிலை வைக்கப்பட்டது. தொடர்ந்து தினமும் பூஜைகள் நடைபெற்று வந்தது. இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகர் சிலை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் கொண்டு சென்று பத்ரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள ஊரணியில் கரைக்கப்பட்டது.

மணமேல்குடி தெற்கூர் அம்மன் கோவில், கல்யாண சித்தி விநாயகர் கோவில், அக்ரஹாரம் வலம்புரி விநாயகர் கோவில், சந்தைபேட்டை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் மற்றும் அண்ணாநகர், வடக்கூர் மற்றும் தண்டலை பொன்னகரம் நல்லூர் ஆகிய கிராம பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அரிமளம், விராலிமலை, திருவரங்குளம், ஆவுடையார்கோவில்

அரிமளம் கோடகநல்லூர் சுந்தரசுவாமி அதிஷ்டானம் பிரகாரத்தில் உள்ள சுந்தர விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விராலிமலை வடக்கு தெரு, ரெத்னா கார்டன் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

திருவரங்குளம் வாசல் பிள்ளையார் கோவில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் திருக்கட்டளை, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை நடைபெற்றது.

ஆவுடையார்கோவில் பூங்குடி கிராமத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு குறிச்சிக்குளம் ஊரணியில் கரைத்தனர்.


Next Story