கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல்

தேய்பிறை அஷ்டமி

பட்டிவீரன்பட்டி காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவர் சன்னதியில், தேய்பிறை அஷ்டமி பூஜை மற்றும் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலபைரவருக்கு யாகசாலை பூஜைகள் மற்றும் சந்தனம், பன்னீர், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதைத்தொடர்ந்து ஐம்பொன்னிலான அங்கி சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் கோவில் வளாகத்தில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி குடைமிளகாய், எலுமிச்சை, தேங்காய் விளக்குகளில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் பட்டிவீரன்பட்டி அண்ணாநகரில் உள்ள ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சொர்ணஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ராஜ அலங்காரம்

தேய்பிறை அஷ்டமியையொட்டி, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் சொர்ண ஆகர்ஷண பைரவர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். கால பைரவரும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

இதேபோல் தாடிக்கொம்பு அருகே சுக்காம்பட்டியில் உள்ள வாஸ்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பைரவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


Next Story