நாகர்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கண்கவர் பொருட்காட்சி - லண்டன் பிரிட்ஜில் ஏறி பொதுமக்கள் உற்சாகம்


நாகர்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கண்கவர் பொருட்காட்சி - லண்டன் பிரிட்ஜில் ஏறி பொதுமக்கள் உற்சாகம்
x

நாகர்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கண்கவர் பொருட்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது. பிரம்மாண்டமான லண்டன் பிரிட்ஜில் ஏறி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த பொருட்காட்சியானது கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கண்கவர் பொருட்காட்சி நாகர்கோவிலில் உள்ள அவிட்டம் திருநாள் மகாராஜா நினைவு மைதானத்தில் கடந்த 26-ந் தேதி தொடங்கியது.

இங்கு லண்டன் பிரிட்ஜை அச்சு அசலாக வடிவமைத்து இருக்கிறார்கள். பிரமாண்டமாக காட்சி அளிக்கும் அந்த லண்டன் பிரிட்ஜ் பொதுமக்களை பெரிதம் கவரும் வகையில் உள்ளது. அதில் பொதுமக்கள் ஏறி செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். இதுபோக துபாயில் உள்ள அல்அராபா, லோட்டஸ், ரிப்பன் பில்டிங் ஆகியவை வண்ண வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.

மேலும் 3டி செப்பி புகைப்படங்கள் ஏராளமாக உள்ளன. இதுபோக எண்ணற்ற வன விலங்களை தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள். அதாவது குட்டியை சுமந்தபடி இருக்கும் கங்காரு, பாண்டா கரடி, வரிக்குதிரை, மான்கள், சிங்கம், புலி, குதிரை, யானை மற்றும் குரங்கு ஆகியவை பெரிய பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இந்த பொருட்காட்சிக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக வந்து செல்கிறார்கள். பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள விலங்குகள் மற்றும் லண்டன் பிரிட்ஜ் முன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.

அதோடு மட்டும் அல்லாது பொருட்காட்சியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதாவது பேன்சி, விளையாட்டு பொருட்கள், வீட்டி உபயோக பொருட்கள் மற்றும் பர்னிச்சர் பொருட்கள் ஆகியவை தனித்தனி கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் நாவுக்கு சுவையான திண்பண்ட கடைகளும் ஏராளமாக உள்ளன. முக்கியமாக டெல்லி அப்பளம், வாழை தண்டு சூப், ஜிகர்தண்டா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதுபோக பொழுதுபோக்கு விளையாட்டுகளும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இந்த பொருட்காட்சியானது தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. ரூ.70 பணம் செலுத்தி டிக்கெட் பெற்று பொருட்காட்சியை கண்டு ரசிக்கலாம்.


Next Story