திருச்சி, சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு


திருச்சி, சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு
x

திருச்சி, சூரியூர் ஜல்லிக்கட்டில் போட்டியை காண வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த் என்பவர் காளை முட்டியதில் உயிரிழந்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தினுடைய முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது பெரிய சூரியூர் கிராமத்தில் இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி மட்டுமல்லாது அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் சுமார் 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியை காணும் ஆர்வத்தில் பார்வையாளர்கள் பலர் களத்திலேயே நின்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த அரவிந்த் என்ற 25 வயது இளைஞர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை 26 நபர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பலத்த காயமடைந்த அரவிந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் களத்தில் இருக்கும் பார்வையாளர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காவல்துறையினரும் விழா கமிட்டியினரும் விதிகளை கடைபிடிக்குமாறும் விதிமீறலில் ஈடுபடக்கூடாது என்றும் மாடை பிடிக்க இரண்டு பேர் மட்டுமே வர வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story