'தமிழகத்தை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணிக்கிறது'; கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தாமல் தமிழகத்தை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தாமல் தமிழகத்தை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
வளர்ச்சி திட்டங்கள்
காமராஜர் பிறந்தநாளையொட்டி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கொடியேற்று விழா, பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக திண்டுக்கல் வந்த கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவை, காங்கிரஸ் கட்சி சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். தமிழகத்தில் தொழில் துறை, விவசாய மேம்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியவர் காமராஜர்.
ஆத்தூர் காமராஜர் அணை, வைகை அணை உள்ளிட்ட அணைகள் கட்ட காரணமாக இருந்தவர் காமராஜர். கிராமப்புற மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க உறுதுணையாக இருந்தவர் காமராஜர். தற்போது தமிழகம் கல்வியில் முன்னேறி இருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் காமராஜர் தான்.
புறக்கணிக்கிறது
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்திற்காக எந்த புதிய திட்டங்கள் கூட செயல்படுத்தப்படவில்லை. தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் கூட ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்கள் தான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தாமல் தமிழகத்தை பா.ஜ.க. அரசு புறக்கணிக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மொரீசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். டெல்லியில் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாமா?. நான் சொல்கிறேன் அண்ணாமலை அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது, இங்கு இருக்கிற பணத்தை சுவிஸ் வங்கியில் போடுவதற்காக தான். இது அரசியல் ஆகிவிடுமா. பா.ஜ.க.வின் அமைச்சரவையில் கூட 33 மந்திரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அமித்ஷா மீது குற்றம்சாட்டப்பட்ட போது அவர் குஜராத்தில் உள்துறை மந்திரியாக இருந்தார்.
நிபந்தனைகள் இருக்கும்
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு நிபந்தனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பிற கட்சியினர் குரல் கொடுக்கின்றனர். ஆனால் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். எனவே வெறுமனே குற்றம்சாட்டக்கூடாது. பொது சிவில் சட்டத்துக்கு நாடு முழுவதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அவர், காமராஜர் பிறந்த நாளன்று இரவு நேர பாடசாலையை தொடங்கியுள்ளதை காங்கிரஸ் வரவேற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்