அடிப்படை வசதிகள் நிறைவேற்றகோரி முட்டாஞ்செட்டி ஊராட்சி அலுவலகத்தை பூட்டி பொதுமக்கள் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றகோரி முட்டாஞ்செட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அடிப்படை வசதிகள்
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவராக கமலபிரியா என்பவர் உள்ளார். துணைத்தலைவராக சபா ரத்தினம் இருந்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 1½ ஆண்டுகளாக முட்டாஞ்செட்டி ஊராட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என தெரிகிறது.
இதனால் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கோபத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று 3, 4, 8, 9, வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அடிப்படை வசதிகளை நிறைவேற்றகோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திடீரென ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமம்) பிரபாகரன், எருமப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரவேல் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். எனினும் போராட்டம் நடந்தபோது முட்டாஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவரோ, துணை தலைவரோ அங்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.