பா.ஜ.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்; வேலூர் இப்ராகிம் பேட்டி
வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்று சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கூறினார்.
கொடைக்கானல் நகர பா.ஜ.க. சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வெளிநாடுகளில் நம் நாட்டை பற்றி அவதூறாக பேசியது, குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசியதால் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு மற்றும் பா.ஜ.க. தான் காரணம் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புகிறார்கள் என்றால், அவர்களுக்கு பித்து பிடித்துள்ளது. இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருகிறார்கள் என்று சமீபத்தில் ஆய்வு நடத்திய ஆஸ்திரேலியா நாடாளுமன்ற ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் சிறுபான்மையினருக்கு எண்ணற்ற திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். ஆனால் தமிழகத்தில் இருந்து சிறுபான்மையின மக்களுக்கான நிதிஉதவி பல நூறு கோடி ரூபாய் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சிறுபான்மையின மக்களுக்கு மத்திய அரசால் கிடைக்க வேண்டிய திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லை.
தற்போது பா.ஜ.க.வை தான் தமிழக மக்கள் எதிர்க்கட்சியாக பார்க்கிறார்கள். மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்து தி.மு.க.வினர் பயத்தில் உள்ளனர். வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். அதேபோல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கிடைப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது மாவட்ட நிர்வாகிகள் மதன், கோவிந்தன், கணேசன், சரவணன், விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.