'தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி எங்களுக்கு தேவையில்லை'; தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் பேட்டி
தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி எங்களுக்கு தேவையில்லை என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் கூறினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் நீலகண்டன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் முத்துராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் முடிவில் பொதுச்செயலாளர் முத்துராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வித்துறை சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவித்ததற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரம் தமிழக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு தேதி இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்ததும் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றார்.
ஆனால் இதுவரை புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படவில்லை. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வருகிற ஜூலை மாதம் தமிழக அரசை கண்டித்து சென்னையில் தனி போராட்டம் நடத்தப்படும். எங்களுக்கு தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி தேவையில்லை. கலைஞர் கருணாநிதி ஆட்சி தான் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.