பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும் கட்சி கட்டமைப்பு வலிமையாக உள்ளது; விஜயகாந்த் மகன் சொல்கிறார்
பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும் கட்சி கட்டமைப்பு வலிமையாக உள்ளது என்று தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறினார்.
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், தேனியில் நேற்று நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டாஸ்மாக் கடைகளின் வருமானம் அரசுக்கு தான் மொத்தமாக செல்கிறது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் பணம் தி.மு.க. பிரமுகர்களின் இல்லத்துக்கு செல்கிறது. அந்த தைரியத்தை அரசு தான் கொடுத்துள்ளது. விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதால் கைது செய்யப்பட்டவர் தி.மு.க. கவுன்சிலரின் தம்பி என்கிறார்கள். தி.மு.க. ஆதரவு இல்லாமல் யாரும் கள்ளச்சாராயம் காய்ச்ச முடியாது. எனவே, தி.மு.க. அரசு தான் இதை கட்டுப்படுத்த வேண்டும்.
தேனி மாவட்டத்தை சுற்றிலும் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது. இளைஞர்கள் அதிக அளவில் இங்கு சுற்றுலா வருவதே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகம் கிடைக்கிறது என்பதால் தான். கொடைக்கானலிலும் போதைப்பொருட்கள் அதிகம் கிடைக்கிறது. நிறைய இளைஞர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். எனது நண்பர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனையை அரசு தடுக்க வேண்டும்.
தே.மு.தி.க. ஏற்கனவே தனித்து நின்ற கட்சி தான். கட்சியின் கட்டமைப்பும் அப்படியே தான் உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், கட்சி கட்டமைப்பு வலிமையாக தான் உள்ளது. அப்பாவுக்கு நான் நடிக்க வேண்டும் என்று ஆசை. எனக்கும் அந்த ஆசை இருந்தது. அதற்கான வாய்ப்பு வந்தால் எதிர்காலத்தில் சினிமாவில் நடிப்பேன். முதல்-அமைச்சர் ஏற்கனவே துபாய் சுற்றுப்பயணம் செய்தார். புதிய திட்டங்கள் கொண்டு வருவோம் என்றார். என்ன கொண்டு வந்தார்கள்?. தற்போது ஜப்பான் சென்று என்ன ஆகப் போகிறது? தமிழகத்தில் இருந்த கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆந்திராவுக்கு ஏன் சென்றன என்று அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.