பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி-கலெக்டர் தகவல்


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி-கலெக்டர் தகவல்
x

நெல்லையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி வருகிற 2, 4-ந்தேதிகளில் நடக்கிறது என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

திருநெல்வேலி

நெல்லையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி வருகிற 2, 4-ந்தேதிகளில் நடக்கிறது.

பேச்சு போட்டி

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், நெல்லை மாவட்ட அளவில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வருகிற 2-ந் தேதியும், கருணாநிதி பிறந்தநாளையொட்டி 4-ந் தேதியும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நெல்லை டவுன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

இதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளும், அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளும் கலந்து கொள்ளலாம். போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

தலைப்புகள்

அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சு போட்டியில் பள்ளி மாணவர்களுக்கு அம்பேத்கரின் இளமைப் பருவம், பூனா உடன்படிக்கை, அயல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி, பவுத்தத்தை நோக்கி, அம்பேத்கரும் காந்தியடிகளும், வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரின் பங்கு, இந்திய அரசியலமைப்பு சட்டம், சமூகநீதி என்றால் என்ன?, அரசியலமைப்பின் தந்தை, சட்டமேதை அம்பேத்கர் ஆகிய தலைப்புகளில் பேச வேண்டும்.

கல்லூரி மாணவர்கள் கற்பி ஒன்றுசேர் புரட்சி செய், பூனா உடன்படிக்கை, புத்தரும் அவரின் தர்மமும், கூட்டாட்சி கோட்பாடும் பாகிஸ்தான் பிரிவினையும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம், அம்பேத்கரின் சாதனைகள், அம்பேத்கர் எழுதிய நூல்கள், அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, அம்பேத்கரும் பவுத்தமும் என்ற தலைப்புகளில் பேச வேண்டும்.

கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப்போட்டிக்கு பள்ளி மாணவர்களுக்கு கலைத்தாயின் தவப்புதல்வன், முத்தமிழறிஞர், சங்கத்தமிழ், செம்மொழி, பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும், பொறுத்தது போதும் பொங்கி எழு, நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி, தகடூரான் தந்த கனி, திராவிடம், நெஞ்சுக்கு நீதி, கல்லூரி மாணவர்களுக்கு என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிட சூரியன், பூம்புகார், நட்பு, குறளோவியம், கலைஞரின் எழுதுகோல், அரசியல் வித்தகர் கலைஞர், சமூக நீதி காவலர் கலைஞர் என்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடக்கிறது.

ரொக்கப்பரிசு

மாவட்ட அளவில் நடைபெறும் கல்லூரி பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று, போட்டி நாள் அன்று நேரில் வரவேண்டும். ஒரு கல்லூரிக்கு ஒரு மாணவர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

இதேபோல பள்ளி அளவில் பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் போட்டியில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாள் அன்று நேரில் வரவேண்டும். ஒரு பள்ளிக்கு ஒரு மாணவர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


Next Story