விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைப்பு

பொள்ளாச்சி-கோவை ரோடு சேரன் நகரில் வேகத்தடை இல்லாமல் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி செய்தி எதிரொலியாக விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி-கோவை ரோடு சேரன் நகரில் வேகத்தடை இல்லாமல் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி செய்தி எதிரொலியாக விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.
வேகத்தடை அமைப்பு
பொள்ளாச்சி-கோவை ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சேரன் நகர் பகுதியில் சாலை மிக குறுகிய வளைவாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்தநிலையில் கடந்த வாரம் மொபட் மீது கார் மோதி சலூன் கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
வளைவான பகுதியில் நிலம் கையகப்படுத்தி சாலையை நேர்ப்படுத்த வேண்டும். விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து கடந்த 20-ந் தேதி தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது. மேலும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதை தொடர்ந்து அதிகாரிகள் வேகத்தடை அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
சாலையை நேர்படுத்த வேண்டும்
இதையடுத்து சேரன் நகரில் கோவை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தடுப்புகள், வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கோவை ரோட்டில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் போது குறுகிய வளைவை நேர்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தேவையான நிலத்தை கையகப்படுத்தி விபத்துகளை தடுக்க சாலையை நேர்ப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் அந்த பகுதியில் விபத்துகளை தடுக்க நிரந்தர தீர்வு காண முடியும். வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கு நன்றி.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






