மாடியில் இருந்து விழுந்தவருக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைமுண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை
மாடியில் இருந்து விழுந்தவருக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் செய்து சாதனை படைத்தனா்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி தனது வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டது. மேலும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கை, கால்கள் செயலிழந்து மயக்க நிலையில் இருந்தார். முண்டியம்பக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தலைமையில் எலும்பியல் துறை தலைவர் அறிவழகன், டாக்டர்கள் அஞ்சன் ராமச்சந்திரநாத் விக்ரம், பொன்னப்பன், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர்கள் செந்தில்குமார், தோசிப் சுப்பிரமணியம், மணிகண்டன் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து கழுத்து எலும்பில் பிளேட் பொருத்தினர்.
இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பேரில் கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார். தற்பொழுது அவர் முழுமையாக குணமாகி எவ்வித துணையும் இன்றி தனியாக நடக்க தொடங்கி உள்ளார்.
இது பற்றி மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி கூறுகையில் இது போன்ற மருத்துவ சிகிச்சையை வெளியே தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ 3½ லட்சம் செலவாகும். முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது மருத்துவ அலுவலர் ரவிக்குமார், உதவி நிலையம் மருத்துவ அலுவலர் வெங்கடேசன், நிர்வாக அலுவலர்கள் சிங்காரம், சக்திவேல் மற்றும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினர் உடன் இருந்தனர்.