சேலம் மாவட்டத்தில்முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்கலெக்டர் தகவல்
சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விளையாட்டு போட்டிகள்
2022-2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் சேலம் மாவட்டத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.
ஆண், பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
15 முதல் 35 வயது வரையிலான பொதுப்பிரிவினர் கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து மற்றும் கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும், 12 முதல் 19 வயது வரையிலான பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, ஆக்கி, நீச்சல், கைப்பந்து, மேஜைப்பந்து போட்டிகளிலும் பங்கேற்கலாம். ேமலும் மண்டல அளவிலான டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.
அரசு ஊழியர்கள்
17 முதல் 25 வயது வரையிலான கல்லூரி மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து, மேஜைப்பந்து போட்டிகளிலும், மண்டல அளவிலான டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அளவிலான இறகுப்பந்து, தடகளம், கைப்பந்து, கபடி, எறிப்பந்து போட்டிகளிலும், மண்டல அளவிலான இறகுப்பந்து, தடகளம், கைப்பந்து, கபடி, எறிபந்து உள்ளிட்ட போட்டிகளிலும், அரசு ஊழியர்கள் மாவட்ட அளவிலான கபடி, தடகளம், இறகுப்பந்து, கைப்பந்து, செஸ் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. இப்போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பயணப்படி, சிறப்பு சீருடை, தங்கும் வசதி ஆகியவை வழங்கப்படும்.
பரிசுத்தொகை விவரம்
மாவட்ட அளவிலான போட்டிகளில் தனிநபர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 எனவும், இரட்டையர் பிரிவிற்கு ரூ.6 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.2 ஆயிரம் எனவும், குழுப்போட்டிகளுக்கு குழு எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 எனவும் பரிசுத்தொகை வழங்கப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வீரர்களின் தனிநபர் மற்றும் குழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இணையதளம் மூலம் பதிவு செய்யாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள இயலாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.