பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
வாலிபால் போட்டி
பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் நேற்று பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு வாலிபால் போட்டிகள் தண்ணீர்பந்தலில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது.
இதில் 14, 17, 19 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட வாலிபால் போட்டிகளில் பெரம்பலூர் குறு வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடின. போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளின் வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், பெரம்பலூர் குறுவட்ட போட்டிகளுக்கான செயலாளருமான ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியரும், இணை செயலாளருமான பாஸ்கர் ஆகியோர் செய்திருந்தனர்.
5 விளையாட்டு போட்டிகள்
இதேபோல் வேப்பூர் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஆக்கி, கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, புல்வெளி டென்னிஸ் ஆகிய 5 விளையாட்டு போட்டிகள் தனித்தனியாக பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று நடத்தப்பட்டது. இதில் வேப்பூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளின் அணிகளை சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர்.
போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளின் வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பரவாய் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், வேப்பூர் குறு வட்ட போட்டிகளுக்கான செயலாளருமான திருநாவுக்கரசு, உடற்கல்வி ஆசிரியர்களும், இணை செயலாளர்களுமான சுப்பிரமணி, முருகன் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக குறுவட்ட அளவிலான போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் பார்வையிட்டார்.
அடுத்த போட்டிகள்
பெரம்பலூர், வேப்பூர் குறுவட்ட அளவில் நேற்று நடந்த போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 8-ந்தேதி பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான டென்னிஸ் போட்டிகள் கோல்டன் கேட்ஸ் பள்ளியிலும், வேப்பூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான ஆக்கி, கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, புல்வெளி டென்னிஸ் ஆகிய விளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்திலும் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.