பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்


வேப்பந்தட்டை குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

பெரம்பலூர்

விளையாட்டு போட்டிகள்

பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று வேப்பந்தட்டை குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிகளை அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், வேப்பந்தட்டை குறுவட்ட விளையாட்டு போட்டிகளுக்கான செயலாளருமான ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

சான்றிதழ்

இதில் 17, 19 வயதுகளுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 3 ஆயிரம் மீட்டர் ஓட்டமும், 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய விளையாட்டு போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. போட்டிகளில் வேப்பந்தட்டை குறுவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்த கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதல் 2 இடம் பிடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

முதலிடம் பிடித்தவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களும், குறு வட்ட விளையாட்டு போட்டிகளுக்கான இணை செயலாளர்களுமான காளிதாஸ், நடராஜன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதேபோல் நேற்று முன்தினம் பெரம்பலூர் குறுவட்ட 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டி பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடந்தது.


Next Story