முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
அரியலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர்.
தடகள போட்டிகள்
அரியலூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 4-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று அரசு ஊழியர்களுக்கான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகள போட்டிகளும், ஒற்றையர், இரட்டையர் பிரிவில் இறகுப்பந்து போட்டிகளும், கபடி போட்டிகளும் தனித்தனியாகவும், மேலும் அரசு ஊழியர்களில் ஆண்களுக்கு வாலிபால் போட்டியும் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
711 பேர் பங்கேற்பு
இந்த போட்டிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) லெனின் முன்னிலையில் பார்வையிட்டார். தடகள போட்டிகளில் 198 பேரும், இறகுப்பந்து போட்டிகளில் இரட்டையர் பிரிவில் 40 பேரும், ஒற்றையர் பிரிவில் 113 பேரும், கபடி போட்டிகளில் 168 பேரும், வாலிபால் போட்டியில் 192 பேரும் என மொத்தம் 711 பேர் பங்கேற்று விளையாடினர். போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.ஆயிரமும் பரிசுத்தொகையாக, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவிலான முதல் இடம் பிடித்த வீரர்-வீராங்கனைகளும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூரில்...
இதேபோன்று பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியும், மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியும், 22-ந் தேதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கான நீச்சல், கால்பந்து போட்டிகள் தனித்தனியாக எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.